பக்கங்கள்

22 மே 2010

பயமறியான்,திரைக் கண்ணோட்டம்.



வீட்டு வேலை செய்து பிழைக்கும் சரண்யா மகன் மகேஷ் ராஜா. குடித்து ஊதாரியாக சுற்றுகிறார். ஆனாலும் மகன்மேல் பாசம். அவரை திருத்த எவ்வளவோ முயன்றும் தோல்வி அடைகிறார்.

ரவுடிகளுக்கு உதவி கோடியாய் சம்பாதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் எதிரிகளை தீர்த்துகட்ட மகேஷ் ராஜாவை பயன்படுத்துகிறார். தாதா பொன்னம்பலத்தை வீழ்த்தி அவரிடம் இருந்த பல லட்சங்களை கொள்ளையடித்து வரவைக்கிறார். கடையில் இருந்து காலி செய்ய மறுக்கும் ஒருவனை மிரட்டி வெளியேற்ற ஏவுகிறார். அப்போது கடைக்காரரின் அடியாட்களுக்கும் மகேஷ்ராஜா கோஷ்டிக்கும் அடிதடி நடக்கிறது. இந்த மோதலில் ரமேஷ்ராஜா வீசும் பாட்டில் உடைந்து கண்ணாடி பறந்து போய் அவ்வழியாக வரும் சரண்யா கழுத்தை சீவுகிறது. அதே இடத்தில் பலியாகிறார். தாய் இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மகேஷ்ராஜாவை என் கவுண்டரில் தீர்த்துகட்ட கிஷோர் போலீஸ் படையுடன் புறப்படுகிறார். அவர் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்.

ஆக்ஷன், காதல், தாய்ப்பாசத்தின் மீது கதையை நகர்த்துகிறார் இயக்குனர் பிரதீஷ்... மூன்றிலும் தாய் மகனுக்கான பாசபோராட்டமே முதல் இடம் பிடிக்கிறது. மகன் கெட்டவனாக இருந்தும் அவன் மேல் காட்டும் தாயின் அன்பும் அவளது மகத்துவத்தை சாவுக்கு பின் உணரும் மகனின் பாசமும் போட்டி போட்டு மனதை பிழிகின்றன.

மகேஷ்ராஜா ஆக்ஷன் கேரக்டரில் பொருத்தமாக பதிகிறார். பார்வை, முறைப்பு, நடை, பேச்சு எல்லாவற்றிலும் அதிரடி. உதயதாரா காதலியாக வந்து போகிறார். அவருக்கும் மகேஷ்ராஜாவுக்கும் இடையிலான காதலில் ஜீவன் இல்லை. கிளைமாக்சில் துப்பாக்கியுடன் விரட்டும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி உதய தாராவிடம் என்னை மறந்து வேறு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள் என்று கண்ணீருடன் விடைபெறும் போது நெஞ்சு கனக்கிறது. அழுக்கு உலகம் கல்லறை, குடி என நாயகனை ஒரே களத்தில் நகர்த்துவது சலிப்பு..

ரவுடிகளை மோத விட்டு பணம் பறிக்கும் வித்தியாசமான போலீஸ் வில்லனாக கிஷோர் மிரட்டுகிறார். சரண்யா தாய் பாசத்தின் சின்னமாக நிற்கிறார். முடிவு பரிதாபம். மணிகண்டனும் ஆக்ஷன் வேஷம் கட்டியுள்ளார். கிஷோர் மனைவியை பலவந்தம் செய்வதும் அதனால் சித்ரவதை செய்து கொல்லப்படுவதும் பரபர... பொன்னம்பலம், தேவிகிருபா, அஸ்வதி, காதல் சுகுமார், கொட்டாச்சி ஆகியோரும் உள்ளனர்.

பி.சி. சிவன் இசையும் ஆர்.சரவணன் ஒளிப்பதிவும் கை கொடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக