பக்கங்கள்

08 அக்டோபர் 2021

பிரபல கவிஞர் பிறைசூடன் காலமானார்!

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.1985-ம் ஆண்டு எம்.எஸ். விஸ்வநாதன் மூலம் திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்ட இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகும்.சென்னையில் வசித்தாலும் சொந்த ஊரான நன்னிலம் மீது அதிகம் பாசம் வைத்திருந்தார் கவிஞர் பிறைசூடன்.இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர், காஞ்சி மஹா பெரியவரின் தீவிர பின்பற்றாளர். மஹா பெரியவா என்ற தலைப்பில் அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் கவிதை தொகுப்பு ஒன்றை இவர் வெளியிட்டிருக்கிறார்.திரைப்படங்களில் இன்றும் நமது செவிகளில் ரீங்காரமிடும், மீனம்மா மீனம்மா, நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான், ஆட்டமா தேரோட்டமா, சோலைப் பசுங்கிளியே, நடந்தால் இரண்டடி, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, இதயமே இதயமே என இன்னும் பல புகழ்பெற்ற பாடல் வரிகளுக்கு கவிஞர் பிறைசூடன் தான் சொந்தக்காரர். பாடலாசிரியர் மட்டுமல்லாமல் இவர் வசன கர்த்தாவும் கூட.ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்களை பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் தான் கவிஞர் பிறைசூடம் இடம்பெற்றிருந்தார். இதுமட்டுமல்லாமல் ஏராளமான பட்டிமன்றங்களுக்கும் இவர் தலைமை தாங்கி வந்தார். திரையுலகோடு தனது பணியை நிறுத்திக் கொள்ளாமல் ஆன்மிகப் பணியிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த இவர் திடீரென உயிரிழந்தது திரையுலகினரை சோகம் கொள்ளச் செய்துள்ளது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே மயக்கமுற்று சரிந்து உயிரிழந்திருக்கிறார்.மறைவின் போது கூட யாருக்கும் எந்த சிரமத்தையும் அளிக்காமல் சென்றுவிட்டார். சென்னை நெசப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கவிஞர் பிறைசூடன் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரையுலக இசை கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அண்மையில் தான் புகழ்பெற்ற கவிஞர் புலமைப்பித்தனை தமிழ் சினிமா இழந்தது. இப்போது அடுத்தபடியாக மீண்டும் ஒரு நல்ல கவிஞனை தமிழ் சினிமா இழந்திருக்கிறது.