பக்கங்கள்

07 மார்ச் 2020

க.அன்பழகன் காலமானார்!

அரைநூற்றாண்டு திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.மூச்சுத்திணறல் காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டு வந்த அன்பழகன் கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அவர் சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.திமுக பொதுச்செயலாளரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98 ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதாவது தனது 96 வயது வரை மிக ஆக்டிவாக இயங்கி வந்த அவருக்கு வயது மூப்பு காரணமாக நடை குறைந்தது. பின்னர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்த அவர் முழுவதும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவரை கவனித்துக்கொள்வதற்காக சுழற்சி முறையில் செவிலியர்களை பணியமர்த்தியது பிரபல தனியார் மருத்துவமனை.திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உயிருடன் இருந்தவரை அவரை காணச் செல்பவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்களுக்கு சைகை செய்வார். நினைவுதப்பும் அளவுக்கு இதுவரை அவரது உடல்நிலை சென்றதில்லை. இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அந்த சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளார்.அன்பழகனின் மறைவை பொறுத்தவரை திமுகவுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம். கருணாநிதியால் அண்ணன் என அழைக்கப்பட்டவர், தொண்டர்களால் பேராசிரியர் என போற்றப்பட்டவர், யாரிடமும் அதிர்ந்து பேசாதவர், அமைதியின் இலக்கணமாக திகழ்ந்தவர், என இவரை பற்றி பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். காரணம் அந்தளவிற்கு சாந்த சொரூபியாக திகழ்ந்தவர் இவர். திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியாக இருந்த இவரது மறைவு ஒட்டுமொத்த திராவிட இயக்க ஆதரவாளர்களுக்கு ஈடு சொல்ல முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது.இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாத ஒரு சிறப்பாக திமுகவில் அரைநூற்றாண்டு காலமாக அதிகாரமிக்க பதவியில் இருந்துள்ளார் அன்பழகன். திமுகவை பொறுத்தவரை ஒருவரை கட்சியில் சேர்ப்பதும், இணைப்பதும் பொதுச்செயலாளருக்கு உரிய உரிமையாகும். மிகவும் அதிகாரமிக்க ஒரு பொறுப்பு என்றுகூட சொல்லலாம். இந்தப் பொறுப்பில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாமல் கருணாநிதிக்கு தோள் கொடுத்த தோழனாகவும், அவருக்கு அண்ணனாகவும் தன் வாழ்நாள் வரை வாழ்ந்து மறைந்துள்ளார் அன்பழகன்.