பக்கங்கள்

23 டிசம்பர் 2014

கே.பாலச்சந்தர் ஒரு பார்வை!

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொபெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார். வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. பின்னர் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின்னர் பல படங்களை இயக்கினார்.