பக்கங்கள்

25 செப்டம்பர் 2020

16 மொழிகள்.. 40 ஆயிரம் பாடல்கள்..பாடும் நிலா கடந்து வந்த பாட்டுப் பாதை!


கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 74.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் இசை மேதையானது குறித்த ஓர் தொகுப்பு..எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு மயங்காத மனிதர்களே கிடையாது என சொல்லலாம்.. அந்தளவுக்கு அற்புதமான குரல் வளத்தை கொண்டவர். ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியமான இவர் சுருக்கமாக எஸ்பி பாலசுப்ரிமணியம் என்றும், எஸ்பிபி, என்றும் பாலு என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.சிறுவயதிலேயே இசை ஆர்வம் அதிகம் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம். காரணம் அவரின் தந்தை ஒரு ஹரிகதா கலைஞர் என்பதால் அப்போதே இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம்.மகனை எப்படியாவது பொறியாளர் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்த்பூர் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார் அவரது அப்பா. ஆனால் டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.இசையில் பேரார்வம் கொண்ட எஸ்பிபி பாடகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் அப்பாவுக்கோ மகனை இன்ஜினியராக பார்க்க வேண்டும் என்ற ஆசை. கல்லூரி நாட்களிலேயே பல பாட்டுப் போட்டிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார் எஸ்பிபி.ஆரம்பத்தில் மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்த எஸ்பிபி அப்போதே பல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். எஸ்பி பாலசுப்ரமணியம் முதல் பாடலாக தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா படத்தில் பாடினார். தமிழில் எம்எஸ்விதான் எஸ்பிபியை அறிமுகப்படுத்தினார்.சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமனார். அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளையும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியன். பல வெளிநாட்டு விருதுகளையும் குவித்துள்ளார் அதுமட்டுமின்றி நாட்டின் மிக உயரிய விருதுகளான மத்திய அரசின் பத்மஸ்ரீ, பம்பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.எஸ்பி பாலசுப்ரமணியம் சிறந்த பின்னணி பாடகராக மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞரும் ஆவார். அதோடு மட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.இந்நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தான் விரைவில் மீண்டு வருவேன் என வீடியோ வெளியிட்டார். ஆனால் சில நாட்களிலேயே வரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.ஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இன்று பகல் அவரது உயிர் பிரிந்தது.