பக்கங்கள்

15 ஏப்ரல் 2011

திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்!

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் மகளுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாடகி சித்ராவுக்கும் என்ஜினீயரான விஜயகிருஷ்ணர் என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 2002 ல் சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது நந்தனம் என்ற மலையாள படத்தில் சித்ரா பாடிய பாடலுக்கு கேரள அரசின் விருது கிடைத்தது. இதனால் குழந்தைக்கு நந்தனா என்ற பெயர் சூட்டினார். குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தது. குடும்பத்துடன் அவர் சென்னை விருகம்பாக்கம் ஏ.ஆர்.கே.தெருவில் வசித்து வந்தார். சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நந்தனா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். ஏ.ஆர்.ரகுமான் வெளி நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் பங்கேற்பதற்காக சித்ரா தனது குழந்தையுடன் துபாய் சென்றார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார். வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா குளிக்கச் சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். அக்கம் பக்கத்தினர் நந்தனாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது. நந்தனா உடலை பார்த்து சித்ரா கதறி அழுதார். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர். இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள் குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக