பக்கங்கள்

09 ஜனவரி 2011

அழகே என மயங்கும் ஆண்கள்!பணமே என ஏங்கும் பெண்கள்!

திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், அழகான பெண்ணே மனைவியாக வரவேண்டும் என ஆண்களும்; நல்ல வேலையில் உள்ள ஆண் தான் கணவனாக வரவேண்டும் என பெண்களும் விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று, தன் இணையதளத்தில் திருமணத்துக்காகப் பதிவு செய்திருந்த ஆண், பெண் உட்பட ஐயாயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தன் வருங்கால கணவன் அல்லது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த ஆய்வில், பெண் குடும்பத்தாரின் பின்னணிக்கு, 49 சதவீத ஆண்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். பெண்ணின் அழகான தோற்றத்துக்கு, 48 சதவீதம் பேர் முக்கியத்துவம் அளித்துள்ளனர். 39 சதவீதம் பேர், தனக்கு வரும் மனைவியின் கல்வி குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர், வருங்கால மனைவியின் வேலைவாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர், பெண்ணின் ஜாதி மற்றும் இனம் குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர். மாறாக, 54 சதவீதம் பெண்கள், தங்களுக்கு கணவனாக அமையப் போகிறவரின் வேலை குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.
53 சதவீதம் பேர், கல்வி குறித்தும், 52 சதவீதம் பேர், கணவரின் குடும்பப் பின்னணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். 46 சதவீதம் பேர், ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 65 சதவீதம் பெண்கள், ஆண்களின் தோற்றத்தை முக்கியமானதாகக் கருதவில்லை.இதுகுறித்து அந்த இணையதளத்தின் தலைவர் கூறுகையில், “பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் போக்கு இக்காலத்தில் மாறிவருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கூட, ஜாதி மற்றும் குடும்பப் பின்னணி முக்கிய காரணிகளாகவே கருதப்படுகின்றன. இதற்கு, மணமகன் தன் பெற்றோரின் கருத்துக்கு இணங்கிச் செல்வதே முக்கிய காரணம். பெண்கள் தங்களின் பாதுகாப்பான வாழ்க்கை குறித்து கவலைப்படுவதால், கணவனின் கல்வி மற்றும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.இருப்பினும், அழகான பெண்ணே தனக்கு மனைவியாக வரவேண்டும் என்ற ஆண்களின் எதிர்பார்ப்பே ஒருவகையில் சட்டவிரோதமான கள்ளத் தொடர்புகளுக்கும் வழிவகுத்து விடுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக