திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் ராம. நாராயணன். சங்க உறுப்பினர்களிடமிருந்து பல கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது, காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. திரையுலகிலிருந்து முதல் புயல் கிளம்பியுள்ளது. அதிமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து முதல் நபராக ராம.நாராயணன் தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் பதவியை விட்டு விலகிவிட்டார்.
திமுகவுக்கு மிகவும் நெருங்கியவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியில் அவரும் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்த் திரையுலகத்தை கலைஞர் டிவி பக்கம் திருப்பி விட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்ககத்தில் மூத்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி, கேயார், ராதாரவி, ஆர்.வி. உதயக்குமார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார் ராம.நாராயணன்.
கட்டப் பஞ்சாயத்தில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். திமுகவின் கைக்கூலியாக மாறி சங்கத்தின் பெயரைக் கெடுத்து விட்டார்.
உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக கூறி பெருமளவில் பணத்தைப் பெற்ற அவர் அதற்கு ரசீதே தரவில்லை. ரூ. 15 கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.
பின்னர் கே.ஆர்.ஜி கூறுகையில், ரூ. 2 லட்சம் கொடுத்து தலைவராக்கப்பட்டவர் இந்த ராம.நாராயணன். தலைவர் பதவிக்கு வந்த பின்னர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பணம் அவர் வீடு தேடிப் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை பிடிவாதமாக செயல்படுத்தி வந்தவர்.
விரைவில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து நாளை மறு தினம் முடிவு செய்யவுள்ளோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக