பக்கங்கள்

24 டிசம்பர் 2010

படம் பார்க்க ஆளில்லை... தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!

சினிமா பார்க்கும் ஆர்வம் கிட்டத்தட்ட குறைந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு மிக மோசமான நிலை உருவாகியுள்ளது. காரணம், பெரும்பாலான திரையரங்குகள் காத்து வாங்குகின்றன, காலி இருக்கைகளுடன்.
இதற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் என்று சிலர் முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், அதையும் தாண்டி, வேறு சில காரணங்களும் உள்ளன என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
முன்பெல்லாம் பொதுமக்களின் ஒரே பொழுதுபோக்கு சாதனமாக சினிமா மட்டுமே இருந்தது. இப்போது டெலிவிஷன், இண்டர்நெட், மொபைல் போனில் படம் பார்க்கும் வசதி என மாற்றுப் பொழுதுபோக்கு சாதனங்கள் வளர்ந்து விட்டன.
சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் ஆட்டபாட்டங்களுடன் கூடிய கிளப்புகள், பப்கள், நடன மையங்கள் பெருகி வருகின்றன. புதிதாக பெண்கள் மசாஜ் கிளப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
நடுத்தர மக்களை பொறுத்தவரை, தியேட்டர்களில் அதிக கட்டணம் வைக்கப்பட்டிருப்பது பெரும் பாதிப்பாகவே கருதப்படுகிறது. ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதை விட, 20 அல்லது 30 ரூபாய்க்கு டி.வி.டி. வாங்கி குடும்பம் முழுவதும் படம் பார்த்துவிடலாம் என்ற மனநிலைக்கு நடுத்தர மக்கள் வந்துவிட்டார்கள்.
தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கிற கூட்டம் குறைந்து விட்டது. ஒரு காட்சிக்கு நான்கு பேர் அல்லது ஐந்து பேர் மட்டுமே வருவதால், மின்சார கட்டண செலவுக்கு கூட போதவில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் வேதனைப்படுகிறார்கள்.
காலை-இரவு காட்சிகள் ரத்து
இதனால் பெரும்பாலான தியேட்டர்களில், காலை காட்சியும், இரவு காட்சியும் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,200 தியேட்டர்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 70 தியேட்டர்கள் உள்ளன. இதில், பெரும்பாலான தியேட்டர்களில் காலை-இரவு காட்சிகள் நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை.
இந்த பாதிப்புக்கு, டிசம்பர் மாத கடும் குளிரும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவையும், குளிரையும் தாங்கிக்கொண்டு தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க யாரும் தயாராக இல்லை.
புதிதாக வெளியாகியுள்ள படங்களில் எந்தப் படத்துக்கும் கூட்டமில்லை. இருபது பேர் கூட தேறுவது கடினமாக உள்ளதாக புலம்புகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
தியேட்டர்களில் வசூல் அடிவாங்கினாலும், சினிமா தொழில் ஆரோக்கியமாகவே இருக்கிறது என்கிறார்கள், சில மூத்த பட அதிபர்கள்.
"இந்த வருடம் மட்டும் மொத்தம் 125 படங்கள் தயாராகி திரைக்கு வந்துள்ளன. இதன் மூலம் சினிமாவில் குறைந்தபட்சம் ரூ.450 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணத்தில் 50 சதவீதம், நடிகர்-நடிகைகளின் சம்பளத்துக்கு போய் விடுகிறது. மீதி 50 சதவீதம், தயாரிப்பு செலவுக்கு போய் விடுகிறது. நடிகர்-நடிகைகளுக்கு போகிற சம்பளம், சினிமாவுக்கு திரும்பி வருவதில்லை. ரியல் எஸ்டேட் போன்ற வேறு தொழில்களுக்கு போய் விடுகிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்,'' என்கிறார்கள் அந்த பட அதிபர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக