பக்கங்கள்

13 டிசம்பர் 2012

இயக்குநர் கர்ணன் மரணம்!

Veteran Cinematographer Karnan Passes Away காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. அமரர் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கர்ணன். காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவு கௌபாய் படங்களை இயக்கியவர் கர்ணன். சண்டை, சாகசக் காட்சிகளைப் படமாக்குவதில் தனித் திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அமரர் எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம். அதேபோ மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்தின் போர்க்கள காட்சி, குதிரையேற்றக் காட்சிகள் இவர் படமாக்கியதுதான். எம்ஜிஆருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளரும் கூட. தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார்களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை எடுத்தாராம். அதேபோல தண்ணீருக்கடியில் படம் பிடிப்பதில் அந்தக் காலத்திலேயே அசத்தியவர் இவர். கர்ணன் தமிழக அரசின் 2003-ம் ஆண்டுக்கான 'ராஜா சாண்டோ வர்த்தக விருது' பெற்றவர். புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கர்ணன்தான். இன்று (13-12-12) அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. கர்ணனின் மனைவி பெயர் சகுந்தலா. இந்த தம்பதிகளுக்கு பாமா, தாரா என்று 2 மகள்கள். பொதுமக்கள் பார்வைக்காக 38, பெருமாள் கோவில் தெரு, சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை 14 ந் தேதி சேத்துப்பட்டு மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு - கர்ணன் மருமகன் சந்திரனை தொடர்பு கொள்ளவும். எண்: 9443385180

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக