பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர் நீத்த செங்கொடியின் நினைவாக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆவணப்படம் ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்படுகின்றது.
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைத் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் மூவரின் தண்டனை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறு "இப்படிக்கு தோழர் செங்கொடி" என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் "பொன்னுசாமி" என்ற புனை பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் "பாலை" ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் 19 அன்று சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதல் சிடியினை பெற்றுக் கொள்கிறார். விழாவின் போது, படம் திரையிடப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக