குகநாதனுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கத்துக்கு ஃபெப்சி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஆர்யா சில தினங்களுக்கு முன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் ஒரு மலையாளி என்பதில் பெருமைப்படுகிறேன். பொதுவாக மலையாளிகள் ரசனையில் உயர்ந்தவர்கள். க்ளாஸ் படங்கள், உயர்ந்த நடிப்புதான் அவர்களுக்குப் பிடிக்கும். தமிழர்கள் ரசனை அப்படியல்ல. சுமாராக நடித்தாலும் லட்சங்கள், கோடிகளைக் கொட்டுவார்கள்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. நி்கழ்ச்சியைப் பார்த்த விசி குகநாதன், ஆர்யாவுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் அதில் அவர் நேரடியாக ஆர்யாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், நடிகர் சங்கம் குகநாதனைக் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது கடந்த செவ்வாய்க்கிழமை.
இப்போது நடிகர் சங்கத்தின் கண்டனத்துக்கு குகநாதன் தலைவராக உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பான (ஃபெப்ஸி) கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பெப்ஸி பொதுச்செயலாளர் சிவா உள்பட அனைத்து நிர்வாகிகளும் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த அறிக்கை:
திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் குறிப்பிட்ட ஒரு நடிகருக்கு எதிராக ஃபெப்ஸி தலைவர் பேசும் போது, 'இதனை நான் ஃபெப்ஸி தலைவராக அல்லாமல், ஒரு தமிழனாகவே கூறுகிறேன்' என்றார் தெளிவாக. ஆனால் நடிகர் சங்கமோ ஃபெப்ஸி தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தலைவர் விசி குகநாதனுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தொழிலாளர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் சினிமா அமைப்புகளில் பல பொறுப்புகளிலும், இங்கே பல சங்கங்களில் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவர் வி சி குகநாதன். 250 படங்களில் பணியாற்றி, தனது 64 வது வயதிலும் எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைவரை வெடி கொளுத்திப் போடுகிறார், கயிறு திரிக்கிறார் என்றெல்லாம் கூறி அறிக்கை விட்டது மிகவும் கண்டிக்கத் தக்கது.
நடிகர் சங்க செயலர் ராதாரவி, டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் சங்கத் தலைவராகவும் உள்ளார். இது பெப்ஸியின் ஒரு அங்கம். அப்படியிருக்கையில், நேரிலோ கடிதம் மூலமாகவோ வி சி குகநானிடம் இதுபற்றி விளக்கம் கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு, பத்திரிகைகள் மூலம் பெப்ஸியை வம்புக்கிழுத்திருப்பது வேதனைக்குரியது. வண்மையாக கண்டிக்கத்தக்கது", என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக