வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்.
சிலர் இதிலேயே கணிசமாக பணம் பார்ப்பதும் நடக்கிறது. தனி நபர் நிறுவனங்கள் சில விளம்பரமெல்லாம் தருகின்றன!
வெகுஜன ஊடகங்களில் எட்டிப் பார்க்காத அறிவு ஜீவித்தனங்களும் இவற்றில் உண்டு... அதேநேரம் அங்கே காட்ட முடியாத வக்கிரங்கள், ஆபாசங்களையும் சிலர் கொட்டித் தீர்ப்பதையும் பார்க்க முடிகிறது. பலர் ஏற்கெனவே வந்ததை காப்பி பேஸ்ட் செய்வதே ப்ளாக் எழுதுவது என்பதில் தெளிவாக உள்ளனர்.
இவர்களுக்கென்று சங்கமெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 3000 பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிலருக்கென வாசகர் வட்டமும் உள்ளன. பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறார்கள். நாலு வரி, நாலு பக்கம் என்று அவரவர் நோக்கத்துக்கு எழுதுகிறார்கள்.
இப்போது இந்த விமர்சனங்களுக்கு ஒரு அங்கீகாரம் தரும் நோக்கில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது மந்திரப் புன்னகை படத்துக்காக தனி ஷோ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஞாநி உள்பட 50க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர்.
இது கரு பழனியப்பனுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், ஏற்கெனவே இணையதள பத்திரிகையாளர்களை தடுப்பதில் குறியாக உள்ள சில பிஆர்ஓக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.
'இவிங்களும் இனி ரெகுலர் ஷோவுக்கு வருவாங்களோ...' என்று ஒருவருக்கொருவர் கவலையுடன் பேசிக் கொண்டதுதான் கரு பழனியப்பனின் ப்ளாக்கர்ஸ் ஷோவின் ஹைலைட்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக