பக்கங்கள்

29 நவம்பர் 2010

கரீனாவை மிஞ்சுவாரா இலியானா?

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்.
இதற்கான கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. நாயகியாக இலியானா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம்தான் இவர் நடிகையானார். ஆனால் கேடி ஓடாததால், அதிருப்தி அடைந்து தெலுங்கோடு நின்று விட்டார்.
தற்போது ஷங்கர் படம் என்பதால் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கு ஒப்புக் கொண்டு நடிக்கவுள்ளார். இந்திப் படத்தில் கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். கரீனா கபூர் அப்படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதை மிஞ்சும் வகையில் இலியானா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இலியானாதான் நாயகியாக நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிப்பார். தமிழில் விஜய்யுடன் ஜோடி போடுவார்.
இப்படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தி 3 இடியட்ஸை மீண்டும் மீண்டும் பார்த்து ஸட்டி செய்து வருகிறாராம் இலியானா.

28 நவம்பர் 2010

மேகனாவுடன் ஷக்தி ஜோடி சேரும் 'கள்ளச்சிரிப்பழகா'

இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தி, அடுத்த முயற்சியாக கள்ளச்சிரிப்பழகா என்ற படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சின்னத் தம்பி படத்தில் வந்த அந்த குண்டுப் பையன்தான் இப்போதைய ஷக்தி.
தனது தந்தையின் இயக்கத்தில், தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் நாயகன் ஆனார். தற்போது பல படங்களி்ல் நாயகனாக நடித்து வருகிறார். இதுவரை பிரேக் கிடைக்கவில்லை.
தற்போது புதிதாக கள்ளச்சிரிப்பழகா படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் புதுமைப்பித்தன், லவ்லி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.கே.ஜீவா. இவர் தான் அழகிய தமிழ் மகன் படத்தி்ன் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜீவா மகேந்திரன், சந்தானபாரதி, பிரதாப்போத்தன் போன்றவர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
கள்ளச்சிரிப்பழகனுடன் சேர்ந்து கள்ளச்சிரிப்பு சிரிக்கவிருப்பது காதல் சொல்ல வந்தேன் நாயகி மேகனா. நகைச்சுவையில் கலக்கவிருக்கிறார் சந்தானம்.
கதாபாத்திரங்கள் மற்றும் இயக்குநர் அறிமுகம் முடிந்துவிட்டது. தற்போது கதைக்கு வருவோம். அது தானே முக்கியமானது. தான் என்ன தான் கஷ்டப்பட்டாலும் அடுத்தவர்களுக்கு புன்னகையுடன் உதவும் இளைஞனின் கதைதான். ஆக, அரைத்த மாவையே வித்தியாசமாக அரைக்கவிருக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார், என்.ரவி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

26 நவம்பர் 2010

நடிகர் சங்கத்துக்கு ஃபெப்ஸி கடும் கண்டனம்!

குகநாதனுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கத்துக்கு ஃபெப்சி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஆர்யா சில தினங்களுக்கு முன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் ஒரு மலையாளி என்பதில் பெருமைப்படுகிறேன். பொதுவாக மலையாளிகள் ரசனையில் உயர்ந்தவர்கள். க்ளாஸ் படங்கள், உயர்ந்த நடிப்புதான் அவர்களுக்குப் பிடிக்கும். தமிழர்கள் ரசனை அப்படியல்ல. சுமாராக நடித்தாலும் லட்சங்கள், கோடிகளைக் கொட்டுவார்கள்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. நி்கழ்ச்சியைப் பார்த்த விசி குகநாதன், ஆர்யாவுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் அதில் அவர் நேரடியாக ஆர்யாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், நடிகர் சங்கம் குகநாதனைக் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது கடந்த செவ்வாய்க்கிழமை.
இப்போது நடிகர் சங்கத்தின் கண்டனத்துக்கு குகநாதன் தலைவராக உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பான (ஃபெப்ஸி) கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பெப்ஸி பொதுச்செயலாளர் சிவா உள்பட அனைத்து நிர்வாகிகளும் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த அறிக்கை:
திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் குறிப்பிட்ட ஒரு நடிகருக்கு எதிராக ஃபெப்ஸி தலைவர் பேசும் போது, 'இதனை நான் ஃபெப்ஸி தலைவராக அல்லாமல், ஒரு தமிழனாகவே கூறுகிறேன்' என்றார் தெளிவாக. ஆனால் நடிகர் சங்கமோ ஃபெப்ஸி தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தலைவர் விசி குகநாதனுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தொழிலாளர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் சினிமா அமைப்புகளில் பல பொறுப்புகளிலும், இங்கே பல சங்கங்களில் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவர் வி சி குகநாதன். 250 படங்களில் பணியாற்றி, தனது 64 வது வயதிலும் எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைவரை வெடி கொளுத்திப் போடுகிறார், கயிறு திரிக்கிறார் என்றெல்லாம் கூறி அறிக்கை விட்டது மிகவும் கண்டிக்கத் தக்கது.
நடிகர் சங்க செயலர் ராதாரவி, டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் சங்கத் தலைவராகவும் உள்ளார். இது பெப்ஸியின் ஒரு அங்கம். அப்படியிருக்கையில், நேரிலோ கடிதம் மூலமாகவோ வி சி குகநானிடம் இதுபற்றி விளக்கம் கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு, பத்திரிகைகள் மூலம் பெப்ஸியை வம்புக்கிழுத்திருப்பது வேதனைக்குரியது. வண்மையாக கண்டிக்கத்தக்கது", என்று அதில் கூறப்பட்டுள்ளது.

24 நவம்பர் 2010

கரு பழனியப்பனின் 'ப்ளாக்கர்ஸ் ஷோ'!

வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்.
சிலர் இதிலேயே கணிசமாக பணம் பார்ப்பதும் நடக்கிறது. தனி நபர் நிறுவனங்கள் சில விளம்பரமெல்லாம் தருகின்றன!
வெகுஜன ஊடகங்களில் எட்டிப் பார்க்காத அறிவு ஜீவித்தனங்களும் இவற்றில் உண்டு... அதேநேரம் அங்கே காட்ட முடியாத வக்கிரங்கள், ஆபாசங்களையும் சிலர் கொட்டித் தீர்ப்பதையும் பார்க்க முடிகிறது. பலர் ஏற்கெனவே வந்ததை காப்பி பேஸ்ட் செய்வதே ப்ளாக் எழுதுவது என்பதில் தெளிவாக உள்ளனர்.
இவர்களுக்கென்று சங்கமெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 3000 பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிலருக்கென வாசகர் வட்டமும் உள்ளன. பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறார்கள். நாலு வரி, நாலு பக்கம் என்று அவரவர் நோக்கத்துக்கு எழுதுகிறார்கள்.
இப்போது இந்த விமர்சனங்களுக்கு ஒரு அங்கீகாரம் தரும் நோக்கில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது மந்திரப் புன்னகை படத்துக்காக தனி ஷோ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஞாநி உள்பட 50க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர்.
இது கரு பழனியப்பனுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், ஏற்கெனவே இணையதள பத்திரிகையாளர்களை தடுப்பதில் குறியாக உள்ள சில பிஆர்ஓக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.
'இவிங்களும் இனி ரெகுலர் ஷோவுக்கு வருவாங்களோ...' என்று ஒருவருக்கொருவர் கவலையுடன் பேசிக் கொண்டதுதான் கரு பழனியப்பனின் ப்ளாக்கர்ஸ் ஷோவின் ஹைலைட்!!

21 நவம்பர் 2010

சிம்ரன் இடத்தை நிரப்ப விரும்பும் சனா!

கவர்ச்சி, நடிப்பு என இரண்டையும் கலந்து அடித்துக் கலக்கிய சிம்ரன் போல ஆக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சனா கான்.
சிலம்பாட்டம் மூலம் தமிழில் நடிக்க வந்த சனா கான், கவர்ச்சிகரமான நடிகை என்ற பெயரை எடுத்தவர். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்து அடக்கம் ஒடுக்கமாக நடித்துள்ளார்.
அப்படியானால் இனி கவர்ச்சி கிடையாதா என்றால், சிம்ரன் இருந்தார். நடிப்பிலும், கவர்ச்சியிலும் கலக்கியவர். அவரது இடத்தை நிரப்ப யாரும் இன்னும் வரவில்லை.
எனக்கும் கூட நடிப்பிலும், கவர்ச்சியிலும் கலக்க வேண்டும் என்பதே ஆசை. கவர்ச்சியாகவும் நடிப்பேன், ஆயிரத்தில் ஒருவன் போலவும் நடிப்பேன்.
நான் இளம் வயது நடிகை. எனவே கவர்ச்சி வேண்டாம் என்று சொல்ல மாட்டேன், சொல்லவும் முடியாது. முழுப் படத்திலும் கவர்ச்சிகரமாக நடிக்க நான் தயார்தான். அதேசமயம், பாவாடை, தாவணியில் வந்து போகவும் ஆசை உண்டு.
கவர்ச்சியில்லாமல் நடிப்பதும் அழகான சினிமாதான். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பது அபூர்வமாக இருக்க வேண்டும்.
தெலுங்கில் இப்போது கத்தி என்ற படத்தில் நடித்துள்ளேன். தூக்கலான கவர்ச்சி அதில். அங்கு ரசிகர்கள் கவர்ச்சி இல்லாவிட்டால் படத்தை ரசிக்க மாட்டார்கள். கவர்ச்சிக்காகவே வருகிறார்கள். எனவே அங்கு கவர்ச்சியாக மட்டுமே நடிக்க முடியும் என்கிறார் சனா.

18 நவம்பர் 2010

தனி ஹீரோவாக களமிறங்கும் ஷாம்!

ஷாம் - ரவி தேஜா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் கிக், ஆந்திராவில் பிளாக்பஸ்டர் படமாக வசூலைக் குவித்தது.
இதைத் தொடர்ந்து ஷாமுக்கு தெலுங்குப் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் நல்ல கதைகளைத் தேர்வு செய்யக் காத்திருந்த ஷாம், இப்போது ஷேத்ரம் என்ற படத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தமிழ் நடிகரான தனக்கு தெலுங்கில் தனி ஹீரோ வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ஷாம்.
தமிழில் ஏற்கெனவே அவர் நடித்த அகம் புறம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்குப் பின், தூசி படத்தை தயாரித்து நடிக்கிறார் ஷாம்.

15 நவம்பர் 2010

வெளி வருகிறது மயிலு!

பிரகாஷ் ராஜ் - மோசர் பேர் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான படம் மயிலு. ஜீவன் இயக்கியிருந்தார்.
ரிலீசுக்கு முன்பே இளையராஜாவின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்ட படம் இது. ஒரு பொங்கல் தினத்தில், இந்தப் பாடல்கள் உருவான விதத்தை இசைஞானி லைவ்வாகவே காட்ட, மெய் மறந்துபோனார்கள் ரசிகர்கள் .
ஆனால் தயாரிப்பாளர்களுக்கிடையில் எழுந்த மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்படியே நின்றுவிட்டது மயிலு.
அந்தப் படத்தில் அறிமுகமாகவிருந்த இயக்குநர் ஜீவன், அதற்குப் பிறகு பா. விஜய்யை வைத்து ஞாபகங்கள் எடுத்துவெளியிட்டது நினைவிருக்கலாம்.
இப்போது மீண்டும் மயிலை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ். கிறிஸ்துமஸுக்கு இந்தப் படம் வெளியாகிறது.
மதுரையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில் ஷம்முவும் புதுமுகம் ஸ்ரீயும் நடித்துள்ளனர்.
படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "இந்தப்படம் வெளியாவது நல்ல சினிமாவுக்கு, நல்ல இசைக்குக் கிடைத்த வெற்றி என்பேன். இந்தப் படத்தின் நாயகன் இளையராஜாதான். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படமாக, இசையாக மயிலு அமையும்," என்றார்.

11 நவம்பர் 2010

இந்தி போய் கஷ்ரம் வேண்டாம் என்கிறார் காஜல்!

தன்னைத் தேடி வரும் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் காஜல் அகர்வால். இந்திப் பட வாய்ப்புகளை மறுத்து வருகிறாராம் அவர்.
நல்ல பெரிய கண்களுடன், செமத்தியான உயரத்துடன், பளிச்சென்று பொம்மை போல இருக்கும் காஜலுக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல கிராக்கி. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தமிழிலும் பெரிய ரவுண்டுக்கு ஆயத்தமாகி வருகிறார்.
தெலுங்கில் அவரைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகளாம். பார்த்து, பதவிசாக படங்களைத் தேர்வு செய்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். தமிழிலும் கூட நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். கை கொள்ளாத அளவுக்கு ஆர்டர்கள் குவிவதால் படு ஹேப்பியாகியிருக்கும் அகர்வால், இந்த இரு மொழிப் படங்களில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளார்.
இதனால் தன்னைத் தேடி வரும் இந்திப் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம். இதனால் இந்திப் படத் தயாரிப்பாளர்கள் சோகமாகியுள்ளார்களாம். காஜல் சேவை தெலுங்கு, தமிழுக்கு மட்டும்தானா, எங்களுக்கு இல்லையா என்று வருத்தப்படுகிறார்களாம்.
ஆனால் காஜலோ, எனக்குத்தான் மன மகிழ்ச்சி தரும் அளவுக்கு தெலுங்கிலும், தமிழிலும் வாய்ப்புகள் வருகிறதே, பிறகு எதற்காக இந்திக்குப் போய் பிற நடிகைகளைப் போல கஷ்டப்பட வேண்டும் என்று விளக்குகிறார்.
பரவாயில்லையே, ஆசின், திரிஷா ஆகியோர் இந்திக்குப் போய் திண்டாடி வருவதைப் பார்த்து கவனமாகத்தான் காய் நகர்த்துகிறார் காஜல்...!

08 நவம்பர் 2010

'அர்ஜூன் ராசா..'-உருகும் ஹரிப்ரியா!

நடிகர் அர்ஜூன், இதயங்களை கொள்ளை கொள்ளும் ராஜா என்று அர்ஜூன் புராணம் பாடிக் கொண்டிருக்கிறாராம் நடிகை ஹரிப்ரியா.
கன்னடத்து ஹரிப்ரியா, அர்ஜூனுடன் இணைந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை நிற்காமல் அர்ஜூன் புராணம் பாடி புளகாங்கிதமடைந்து காணப்படுகிறாராம் ஹரிப்ரியா.
ஏன் இப்படி அர்ஜூன் புராண் என்று 'ஹரி'யிடம் கேட்டால், அர்ஜூன் சார் அப்படி ஒரு 'அமைக்கபிள்' ஆன நபர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்று கேட்டதுமே எனக்கு திரில்லாகி விட்டது. அர்ஜூன் சாருடன் இணைந்து நடித்தது இதுவே முதல் முறையாகும். இதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு அர்ஜூன் படங்களிலேயே மிகவும் பிடித்தது ஜென்டில்மேன்தான். படத்தின் பெயருக்கேற்ப அவரும் உண்மையில் ஒரு ஜென்டில்மேன்தான்.
மிகவும் எளிமையானவர் அர்ஜூன். இயல்பாக பழகினார். டயலாக்கை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். இயல்பாக நடிக்க எனக்கு பேருதவி புரிந்தார்.
படத்தில் வரும் டூயட் பாட்டில் மகதீரா, மகதீரா என்று வரிகள் வரும். மகதீரா என்றால் தெலுங்கில் ராஜா என்று பெயர். உண்மையிலேயே அர்ஜூனும் இதயங்களை கொள்ளை கொள்ளும் ராசாதான் என்கிறார் ஹரிப்ரியா.
நமக்கே ரொம்ப புல்லரிக்குதே...!

05 நவம்பர் 2010

'சிக்' ஷ்ரியா-சிலிர்க்கும் ஹீரோக்கள்!

ஷ்ரியாவின் நடிப்புக்குப் பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ அவரது அழகுக்கும், உடல் அமைப்புக்கும் நிறையவே பாராட்டுக்கள் கிடைக்கிறதாம்-ஹீரோக்களிடமிருந்து.
சிக் உடல் நாயகிகளுக்குத்தான் இன்று மார்க்கெட் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இந்தியில், சைஸ் ஜீரோ நாயகிகளுக்கு செம கிராக்கி உள்ளது. தமிழ் சினிமாவிலும் கூட இப்போது சிக் நாயகிகள் பெருத்துப் போய் விட்டார்கள்.
அவர்களில் முக்கியமானவர் ஷ்ரியா. இவரது உடல் வாகு தொடர்ந்து ஒரே மாதிரியாக இருப்பதாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள். நடிக்க வந்தபோது என்ன சைஸில் இருந்தாரோ அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறாராம் ஷ்ரியா.
தற்போது மேலும் ஸ்லிம்மாகி பல ஹீரோக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளாராம். ஆனால் இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்தி ஹீரோக்களாம். அவர்கள் ஷ்ரியாவின் ஸ்லிம் அழகை பாராட்டியதோடு, எப்படி இப்படி தொடர்ந்து கட்டுக்கோப்பாக உடலை வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆச்சரியத்தோடு கேட்கிறார்களாம்.
எல்லோருக்கும் ஷ்ரியா சொல்கிற ஒரே பதில் யோகா செய்வதால்தான் என்பதுதானாம். ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான சில ஹீரோயின்களுக்கும் கூட யோகா செய்யுமாறு அட்வைஸ் செய்கிறாராம் ஷ்ரியா.
ஷ்ரியாவின் அட்வைஸைக் கேட்டு உடம்பை ஸ்லிம்மாக்க யோகாவுக்கு மாறி தீவிரமாக அதைக் கடைப்பிடித்து வருகிறாரம் ஷ்ரியாவின் தோழியான ரீமா சென்.

03 நவம்பர் 2010

'உம்மாடா செல்லம்':சொன்னது பாக்கியாஞ்ச்சலிதான்.

நான் நடிகை பாக்யாஞ்சலியை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரி வற்புறுத்தவில்லை. மாறாக, நடிகை பாக்யாஞ்சலிதான் என்னைக் காதலிப்பதாக கூறி எனக்குக் கடிதம் எழுதினார், எஸ்.எம்.எஸ். அனுப்பினார் என்று கோர்ட்டில் வில்லன் நடிகர் வேலு தெரிவித்துள்ளார்.
நெல்லு, உன்னையே காதலிப்பேன், கோட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் பாக்யாஞ்சலி. அதற்குள் பெரும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். வில்லன் நடிகர் வேலு தன்னை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்வதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும், தனது வீட்டில் வைத்து அடித்து உதைத்ததாகவும், முத்தம் கொடுத்தது போல புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். நடிகையிடம்நேரில் விசாரணை நடந்துள்ளது.ஆனால் நடிகர் வேலு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அப்படியும் வரவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் கோர்ட்டை நாடியுள்ளார் வேலு.
இந்த மனு நேற்று 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பரஞ்சோதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வேலுவின் வக்கீல் ஆஜராகி, வேலுவுக்கு பாக்யாஞ்சலி காதல் கடிதம், எஸ்.எஸ்.எஸ் அனுப்பியுள்ளார்.
'உம்மாடா செல்லம்'
அந்தக் கடிதத்தில், மை டியர் வேலு, நீ எங்கே இருக்கிறாய்? நீ இல்லாமல் நான் இல்லை. நீ எனக்கு தேவை. உன்னைப் பார்க்கணும். உன்னை கட்டித் தழுவ வேண்டும். ஐ லவ் யூ சோ மச், உம்மாடா செல்லம். நான் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும். கடிதத்தின் கீழே ஐ லவ் யூ என்று 6 தடவை எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கடிதத்தை பாக்யாஞ்சலிதான் எழுதினாரா என்பதை கண்டுபிடிக்க அவகாசம் தேவை என்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு அரசுத் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதி,நாளை மறுநாளைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

02 நவம்பர் 2010

நான் இனிமே அமலா-அனகா!

நடிகை அனகா தனது பெயரை மீண்டும் ஒரிஜினல் பெயரான அமலா பால் என்றே மாற்றி விட்டார்.
கேரளாவிலிருந்து நடிக்க வந்தவர் அனகா. சிந்துசமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்த அவர் அந்த சர்ச்சையை தற்போது மறக்க விரும்புகிறாராம்.
யாராவது சிந்துசமவெளி படம் குறித்து கேட்டால், அய்யோ, அதை விடுங்க சார், இப்போது மைனா படத்தில் நடித்திருக்கிறேன். அதைப் பற்றிக் கேளுங்கள் என்று கூறி மைனா குறித்து விரிவாகப் பேசுகிறார்.
சிந்துசமவெளிக்கு் முன்பு வரை அமலா பால் என்ற பெயரிலேயே அவர் நடித்து வந்தார். ஆனால், சிந்துசமவெளி படத்தின்போது இயக்குநர் சாமிதான் அனகா என்று பெயரை மாற்றினார். இப்போது சிந்துசமவெளி தொடர்பான அடையாளத்தையே வெறுக்கும் அனகா, தனது ஒரிஜினல் பெயரான அமலா பாலுக்கே மாறி விட்டாராம்.
இனிமேல் என்னை அமலா என்றே அழையுங்கள் என்றும் கொஞ்சலாக கூறுகிறார்.
சிந்துசமவெளி சர்ச்சையின்போது பெரும் மன வேதனை அடைந்திருந்தாராம் அனகா. அப்போது அவரது தோழியர்தான் பெரும் ஆறுதல் கூறினார்களாம். கேரளாவில் பிஏஆங்கிலம் படித்து வருகிறார் அனகா என்பது உபரித் தகவல்.

01 நவம்பர் 2010

பாடல் மூலம் அம்புவிடும் மன்மதன் கமல்!

மன்மதன் அம்பு படத்தில் கமல் ஹாஸனே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
சினிமா உருவாக்கம் என்று வந்தால் கமல்ஹாஸன் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். இயக்கம், பாடுவது, நடனம், நடிப்பு என அவர் அனைத்து துறையிலுமே வல்லவர்தான்.
ஏற்கெனவே தன்னை ஒரு திறமையான பாடலாசிரியராக, ஹே ராம் படத்தில் நிரூபித்தார். இளையராஜா இசையில் எப்போது கேட்டாலும் இதயத்தை வருடும், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாட்டு கமல் எழுதியதுதான்.
அடுத்து மன்மதன் அம்பு படத்துக்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 4 பாடல்களை எழுதியுள்ளார் கமல்.
இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், "மன்மதன் அம்பு படத்தில் கமல்தான் ஹைலைட். நடிப்பு என்றில்லாமல், பல துறைகளிலும் கமலின் பங்களிப்பு இந்தப் படத்தில் அதிகம். அதற்கு ஒரு உதாரணம், இந்தப் படத்தின் 5 பாடல்களில் நான்கை கமல் சாரே எழுதியிருப்பதுதான்..." என்றார்.
பாடல் வெளியீட்டு விழா நவம்பர் 20-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.