பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2010

வெளிநாட்டவருக்கு தத்துக் கொடுக்கப்பட்டு 31 ஆண்டுகளின் பின் உண்மையான தாயும்-சேயும் சந்திப்பு!



சுவீடன் தம்பதிகளுக்கு 31 வருடங்களுக்கு முன் தத்துக் கொடுக்கப்பட்ட சிங்களப் பெண் ஒருவர் அவருடைய உண்மையான தாய், சகோதரர்கள் ஆகியோருடன் இன்று இலங்கையில் மீள இணைந்து கொண்டார்.
1970 களில் சுவர்ணா ஜயசிங்க என்பவருக்கு மூத்த மகளாக பிறந்த இவர் வீட்டின் வறுமை நிலை காரணமாக உடனடியாகவே தத்துக் கொடுக்கப்பட்டார்.
தத்தெடுத்த சுவீடன் தம்பதியர் இவருக்கு Suzanne Maria Chandima என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் Bio Parents Locate என்கிற அமைப்பின் மூலம் Suzanne Maria Chandima உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்தார்.
இவர் இம்மகிழ்ச்சியை ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டபோது தெரிவித்தவை வருமாறு:-
”நான் மிக நீண்ட கால முயற்சிக்குப் பின் எனது உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து விட்டேன்.இது எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய தருணம் ஆகும்.
நான் முதல் தடவையாக இலங்கைக்கு இப்போதுதான் வந்துள்ளேன். இனி மேல் அம்மாவையும், சகோதரர்களையும் காண அடிக்கடி வருவேன்.”
தத்துக் கொடுத்த தாயான சுவர்ணா ஜயசிங்க தெரிவித்தவை வருமாறு:-
”நான் எனது மூத்த மகளை ஒருபோதும் எவருக்கும் விட்டுக் கொடுக்க விரும்பியதே இல்லை.கடந்த 31 வருடங்களாக பெரும்துன்பத்தை மனதில் சுமந்து வந்திருக்கின்றேன்.இன்றுதான் என்னால் நிம்மதியாக மூச்சு விட முடிகின்றது.
எனது மூத்த மகள் எனக்கு மீண்டும் கிடைத்து விட்டார். தாய்-சேய் உறவை எவராலும் பிரிக்கவே முடியாது.” Bio Parents Locate அமைப்பின் தலைவர் பேராசிரியர் வைத்திய கலாநிதி ரொஹான் ரட்ணாயக்க கருத்துக் கூறுகையில் கடந்த 25 வருடங்களில் 35 ஆயிரம் இலங்கைச் சிறுவர்கள் வெளிநாட்டவர்களுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக