பக்கங்கள்

15 ஆகஸ்ட் 2010

விருந்தாளி-திரை விமர்சனம்.



காதலியை நினைத்து அவள் நினைவுகளோடு வாழும் ஒரு இளைஞனின் கதை.
கோபத்தில் கொலை செய்து விட்டு சிறையில் கம்பி எண்ணுபவர் நாசர். அவரது மகன் ஈஸ்வர். இவர் தனது கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர். பணம் வசூலிக்கும்போது சிலரிடம் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், ஏழைகளிடம் இரக்க குணம் காட்டுபவர்.
ஒரு ஆட்டோக்காரன் பல நாள் டிமிக்கு கொடுத்து அவரை ஏமாற்ற, இவரோ வழியில் ஆட்டோவை மடக்கி பணத்தை கொடுத்தப் பிறகுதான் சாவி என்று முரண்டு பிடிக்க, அதில் பயணியாக வந்த கதாநாயகி தியானா, அவருடன் மோதுகிறார். கோபத்தில் அவளை எடுத்தெறிந்து பேசும் ஈஸ்வர், அவர் தனது ஊர் போஸ்ட்மேனின் மகள் என்றதும், அவள் மீது மரியாதை ஏற்பட்டு, பின்பு அவளை காதலிக்கவும் செய்கிறார்.
ஈஸ்வர் தன் காதலை வெளிப்படுத்த மேற்கொள்ளும் பைத்தியகாரத்தனச் செயல்கள் தியானாவுக்கு பிடித்துப்போகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரை காதலித்து, அவனுக்காக உயிரையே விடுகிறார் தியானா. அது எதற்கு? எப்படி? என்பது மீதிக் கதை.
புதுமுகமாக இருந்தாலும் ஈஸ்வர் தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்யும்போது, அவர் செய்யும் சேட்டைகளும், காதல் வயப்பட்டு தனக்கு தானே கடிதம் எழுதிக் கொண்டு அலைவதும் ரசிக்கக் கூடியது. நல்ல உடல் கட்டமைப்புடன் களம் இறங்கியிருக்கும் இவர் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் களத்தில் நிற்கலாம்.
கதாநாயகி தியானா பட்டணத்துப் பெண்ணாக வந்து படபடத்து பேசுவது, காதல் வயப்படுவது, கொலையைப் பார்த்து, பதறி ஓடி வருவது என அசத்தியிருக்கிறார். சிங்கம் புலி சிரிக்க வைக்கிறேன் என்ற பேரில் பேசி பேசியே நம்மை நெளிய வைக்கிறார் படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் இவர்தான். (ஏதாவது ஒன்றை சரியாக செய்யுங்க பாஸ்!). படத்தில் வரும் பாதி வசனங்களை தனக்காகவே எழுதியிருக்கிறார் போலும்! காதலுக்கு பச்சைக் கொடி காட்டுபவராக வரும் கதாபாத்திரத்தில் நாசர் நச்! போலீஸ்காரராக வரும் சேரன் ராஜ், சில நிஜ போலீஸ் அதிகாரிகளை ஞாபகப்படுத்தும் அளவிற்கு இயல்பான நடிப்பை வழங்கி அந்த பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
பாடலிலும், பின்னணி இசையிலும் "இவர் யார்?' என்று கேட்க வைக்கிறார் எஸ்.எஸ். குமரன். முருகன் மந்திரம் இயற்றியுள்ள நான்கு பாடல்களும் கவனிக்கத்தக்கது. நாகர்கோவிலின் செழிப்பையும், வனப்பையும் தனது கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஜன்.
நண்பனின் காதலுக்கு உதவி செய்ய போய், தன் காதலியை தவற விட்ட ஒரு காதலனையும், அவன் அந்த காதலியையே நினைத்துக் கொண்டு வாழ்வதையும் அழகாகச் சொல்ல வந்த இயக்குநர் வாட்டர்மேன், திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.
வரவேற்கக் கூடிய விருந்தாளி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக