பக்கங்கள்

27 அக்டோபர் 2013

நடிகைகளிடம் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி?

நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள். தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது. நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர். இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார். 'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார். அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே... "நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக