தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணியினர் பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது நிர்வாக திறமை சரியாக இல்லை என்று கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் முக்தா சீனிவாசன் தலைமையிலான எதிர் அணியினர். அதன் விவரம் வருமாறு...
சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டடத்தில் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன் தலைமையில், பஞ்சு அருணாசலம், கேயார், ஜி.சேகர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். முக்தா சீனிவாசன் பேசும்போது, இந்த சங்கம் 1971-ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்த ஏழு பேரில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். 83வயதாகிவிட்டது. 40 படங்களுக்கு மேல் செய்துவிட்டேன். எத்தனையோ அனுபவம் இருந்தாலும் இப்படி ஒரு சங்கத்தில் இருப்பது மிக வருத்தமாக உள்ளது. எஸ்.ஏ.சி., மீது எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது. ஆனால் அவர் ஒரு சங்கத்துக்கு தலைவராக எந்த தகுதியும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த சங்கத்திற்கு ஏற்ற தகுதியும், திறமையும், பேச்சாற்றல், நிர்வாக திறமை, அனுசரித்து செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்றாவது இருக்கனும். இதில் எதுவுமே அவரிடம் கிடையாது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்ய வேண்டியது என்பது அவருக்கு சுத்தமாக தெரியவில்லை. அந்தகாலத்தில் சங்கம் ரொம்பவே பொறுப்புடன் செயல்பட்டது. காரணம் தலைவர்கள் அப்படி அமைந்தனர். வாசன், ரெட்டி போன்றவர்கள் தலைமை வகித்த இடம் இது. இவர் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. சங்கம் பக்கம் வருவதே இல்லை. பழைய உறுப்பினர்களை மதிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் போலீஸ்க்கு போகிறார். மொத்தத்தில் அவரது பணி சங்கத்திற்கு பூஜ்யம்.
இவர் இந்த இடத்தை பிடித்துக்கொண்டு செய்ய முடியாத விஷயங்களை அடுத்தவர்களுக்காவது அந்த வாய்ப்பை கொடுக்கலாம். அதுவும் செய்யமாட்டார். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கூட அனுப்புவது இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் என்னவென்று தெரிவது இல்லை. என்னால் இந்த சங்கத்தை விட்டு விலகி புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்க முடியும். அது நன்றாக இருக்காது. முடிவாக எஸ்.ஏ.சி.க்கு ஒன்று சொல்கிறேன். தன்மானம் இருந்தால் நீங்கள் இந்த பதவியை விட்டு விலகுங்கள், அடுத்தவர்களுக்கு வழிவிடுங்கள் என்றார்.
மேலும் எஸ்.ஏ.சி., அவரது மகன், அதாவது விஜய் அரசியலில் வரவேண்டும் என்பதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார். இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்கு வழக்கு சரியாக காட்டவில்லை, முறையாக பொதுக்குழு கூட்டவில்லை என்றும், வருகிற 28ம் தேதி பொதுக்குழு கூட்டி அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்யபோவதாக கேயார், சேகர் உள்ளிட்டோர் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக