பக்கங்கள்

15 ஜூன் 2012

காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார். காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை. மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை. அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன், பேத்திகள் உள்ளனர். இன்று உடல் தகனம் காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தகனம் இன்று மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக