பக்கங்கள்

23 ஏப்ரல் 2013

லால்குடி ஜெயராமன் மறைந்தார்!

பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் நேற்று  திங்கட்கிழமை சென்னையில் தமது 82 வது வயதில் காலமானார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட பிறகு சில காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள். அனைத்துவித இசைக்கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள். கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம் எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார். 70 ஆண்டுகள் இசை வாழ்க்கை எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது. லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார். தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லா
ங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார். எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். அவரது மறைவுக்கு பல்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பி.பி.சி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக