பக்கங்கள்

15 ஏப்ரல் 2013

திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென ஒரு இடம் வகித்த பி.பி. ஸ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந்தார். அவர் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விடை கொடுத்தனர். 83 வயதான பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முதல்வர் சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேயர் சைதை துரைசாமி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ். ஜானகி, வாணிஜெயராம், மாலதி, எஸ்.பி.சைலஜா உள்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், "பி.பி.ஸ்ரீனிவாஸ் தேனிசை குரலாக ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்தார். தமிழக அரசு அவருக்கு இயல் இசை நாடக மன்றத்தில் பதவி அளித்து கவுரவித்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக