பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்,நேற்று முன்தினம்(19.02.2012) நள்ளிரவில் காலமானார்.
இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஜெமினி பட நிறுவனம் தயாரித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை எஸ்.என்.லட்சுமி. தொடர்ந்து எம்ஜிஆர் நடித்த பாக்தாத் திருடன், மாட்டுக்கார வேலன், விவசாயி, சங்கே முழங்கு, தாய்க்கு தலைமகன், இதய வீணை, சிவாஜி நடித்த பாபு, தேவன் மகன், ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன், மகாநதி மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
பாக்தாத் திருடன் படத்தில் படைத் தளபதி வேடத்தில் நடித்தவர் டூப் போடாமல் நிஜப் புலியுடன் சண்டையிட்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் இரும்பு வீராங்கனை என்ற பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 6 ஆயிரம் நாடகங்களுக்கு மேல் குறிப்பாக கலைவாணர் என்எஸ்கே நாடக மன்றத்திலும், கே.பாலச்சந்தர் நடத்திய நாடகத்திலும் நடித்து புகழ் பெற்ற எஸ்என் லட்சுமி, கார் ஓட்டுவதிலும் வல்லவராக இருந்தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக