கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினியின் கோச்சடையான் படத்திலிருந்து நடிகை சினேகா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
அவர் மே மாதத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதம் அவருக்கும் பிரசன்னாவுடன் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே சினேகாவும் பிரசன்னாவும் மாறி மாறி இதனை பத்திரிகைப் பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
எனவே அந்த நேரத்தில் அவர் கோச்சடையானில் நடிக்க முடியாது என்பது தெரிந்து, அவருக்குப் பதில் ருக்மணியை ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ருக்மணி சிறந்த நடனக் கலைஞர். பாரதிராஜா இயக்கத்தில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முக்கிய கலை நிகழ்ச்சிகளில் இவரது நடனம்தான் இப்போதெல்லாம் ஹைலைட். கோச்சடையானுக்காக நேற்று நடந்த 'போட்டோ சூட்'டிலும் (புகைப்பட ஷூட்டிங்) கலந்து கொண்டார்.
ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கவிருந்து, திடீரென கடைசி நேரத்தில் அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக