பக்கங்கள்

30 நவம்பர் 2011

சௌமியாவை கத்தியால் குத்திய காதலன்!

பிரபல கன்னட நடிகை சவுமியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன் அனில்குமார் அவரை 13 முறை உடல் முழுக்க கத்தியால் குத்தினார். சவுமியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. பெங்களூரைச் சேர்ந்த அனில் குமாரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அனில்குமார் ஏற்கெனவே ரஜனி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
ரஜனியை விவாகரத்து பெற முயற்சித்து வருகிறார். இந்த விவாகரத்துக்கான வழக்குச் செலவைக்கூட சவுமியாதான் கொடுத்து வந்தாராம்.
இந்த நிலையில் சவுமியா நடத்தையில் அனில்குமாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. சினிமா உலகில் வேறு சிலருடன் சவுமியா தொடர்பு வைத்து இருப்பதாக கருதினார். இதனால் அவரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தார். சவுமியா சில இளைஞர்களுடன் நெருக்கமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பாய்ந்து சென்று சவுமியாவை கத்தியால் குத்தினார்.
கழுத்து, வயிறு, வலதுகை போன்ற பகுதிகளில் பலமுறை சர மாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சவுமியாவை யலஹங்காவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்ததும் போலீசார் அனில்குமார் வீட்டுக்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அனில்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மனைவியைக் குத்திக் கொல்ல முயன்றது நினைவிருக்கலாம்.

25 நவம்பர் 2011

நடிப்பில் இஷ்ரமில்லாத கீர்த்தனா.

டைரக்டர் மணிரத்னம் இயக்கவிருக்கும் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் கீர்த்தனா. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கீர்த்தனா இப்போது தோளுக்கு மேல் வளர்ந்த தோழியாக நிற்கிறார். மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் அறிமுகமாகிறார். இவ்ருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகைகளுக்கு வலை வீசிய மணிரத்னம், ஏகப்பட்ட அழகிகளை பார்த்த பின்பும் திருப்தியில்லாமலேயே இருக்கிறார்.
அந்த நேரத்தில் அவரது மனதில் பளிசென்று வந்தது கீர்த்தனாவின் முகம். கீர்த்தனாவை உடனே வரவழைத்த மணி, ‘ஹீரோயினா நடிக்கிறீயா? என்றாராம். அந்த இடத்திலேயே இதற்கு பதிலளித்த கீர்த்தனா, ‘அங்கிள் எனக்கு நடிப்பதில் விருப்பம் இல்ல. என்னை உங்க அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிறீங்களா? என்றாராம். துணிச்சலான பெண்களுக்கு தோல்வி ஏது? உடனடியாகவே அசிஸடென்ட்டா சேர்த்துக் கொண்டாராம் மணிரத்னம்.

23 நவம்பர் 2011

நடிகையுடன் திருமணம் நடக்காது!

நடிகை அஞ்சலியை காதலிக்கவில்லை என நடிகர் ஜெய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக ஒரு நடிகையைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் ஜெய்யும், அஞ்சலியும் இணைந்து நடித்தனர். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த செய்தியால் கோபமடைந்த அஞ்சலி, ஜெய்யுடன் காதல் இல்லை என்றும் இனிமேல் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று பேட்டி கொடுத்தார்.
இதுகுறித்து பதிலளித்த நடிகர் ஜெய், நான் நிச்சயமாக காதல் திருமணம் செய்ய மாட்டேன். அதுவும் ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்தார்.

19 நவம்பர் 2011

அம்மாவால்தான் இப்படியானேன்!

நான் சினிமா நடிகை ஆனதற்கும், இந்த நிலைக்கு வந்திருப்பதற்கும் என் அம்மாதான் காரணம் என்கிறார் நடிகை த்ரிஷா.
கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து ஒதுங்கி கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகிறார் என்று கூறப்பட்ட நேரத்தில், மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா.
அதுவரை மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் மும்முரமாக இருந்த அவர் அம்மா உமாவும், இப்போது அதில் கொஞ்சம் நிதானம் காட்ட ஆரம்பித்துள்ளார். மார்க்கெட் இருக்கும்போதே சேர்த்து வைத்தால்தானே ஆச்சு!
தெலுங்கில் இரண்டு படம், தமிழில் சமரன் மற்றும் ஒரு புதிய படம் என த்ரிஷா மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன் அம்மாதான் தன் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் நபர் என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் முதல் பெஸ்ட் பிரண்டும் அவர்தான். எப்போதும் எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களை என்மீது திணிக்க மாட்டார்.
நான் சினிமாவுக்கு வரும்முன்பு மாடலிங் பண்ணேன். அதற்காக படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால் என் அம்மா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
மாடலிங் செய்ய அனுமதித்தார். மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் இந்தியா என மாடலிங்கில் என் கேரியர் கிராஃப் ஏறியபோதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க அழைத்தார்.
முதல் படமான 'லேசா லேசா' படம் தோற்றதும் சினிமாவே வேண்டாம்னு விலக நினைச்சேன். ஆனால் என் அம்மாதான் அப்போது எனக்கு மனவலியை தந்தாங்க. அடுத்தடுத்த படங்களில் எனக்கு பாராட்டு... வெற்றி எல்லாமே கிடைச்சிடுச்சி," என்றார்.

16 நவம்பர் 2011

அவர் மெளன குருதான் என்கிறார் இனியா!

வம்சம், உதயன் ஆகிய படங்களுக்குப் பிறகு அருள்நிதி நடிக்கும் புதிய படம் மவுன குரு.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இனியா அறிமுகமாகிறார். படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் அருள் நிதி, இனியா உள்ளிட்ட குழுவினர்.
அருள்நிதி கூறுகையில், "ஒரு கோபக்கார ஆனால் அமைதியான இளைஞராக வருகிறேன். இந்தப் படத்தின் கதையை கேட்டபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எனக்கு மிகத் திருப்தியாக இருக்கிறது. படத்திலேயே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆக்ஷன் காட்சிகள் அல்ல, இனியாவுடனான காதல் காட்சிகள்தான்", என்றார்.
ஏன் அப்படி... ? என்று கேட்டபோது, "பொதுவாகவே பொண்ணுங்க கூட பேசவே எனக்கு ரொம்ப கூச்சம். அப்படிப்பட்ட என்னைப் போய் ஹீரோயினுக்கு கிஸ்ஸெல்லாம் அடிக்கச் சொன்னா... கஷ்டமாத்தானே இருக்கும். ஆனாலும் சமாளிச்சிக்கிட்டேன்," என்றார்.
மவுனகுருவில் நடித்த அனுபவம் குறித்து இனியா கூறுகையில், "ஹீரோ அருள்நிதி அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பார். படத்தின் தலைப்புக்கேத்தமாதிரி மவுனகுருதான் அவர்," என்றார்.

14 நவம்பர் 2011

பாவாடை தாவணி விரும்பாத சுனேனா!

சும்மா, சும்மா பாவாடை, தாவணியில் வரும் கிராமத்துப் பெண்ணாக நடிக்கவே அழைத்தார்கள் அதனால் தான் வம்சம் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டேன் என்று நடிகை சுனேனா தெரிவித்தார்.
வம்சம் படத்தில் கருணாநிதி குடும்பத்து வாரிசான அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த சுனேனாவை அதற்குப் பிறகு ஆளையே காணோம். அவரைத் தேடிக் கண்டுபிடித்து காரணம் கேட்டதற்கு எல்லாம் பாவாடை, தாவணியால் வந்த இடைவெளி என்றார். என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது,
வம்சம் படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாக வந்தேன். அந்த படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த 4,5 படங்களில் பாவாடை தாவணி அணியும் கிராமத்துப் பெண் கதாபாத்திரமாகத் தான் இருந்தது.
இது என்னடா ஒரே பாவாடை, தாவணியாக இருக்கிறது என்ற பயமே வந்துவிட்டது. அதனால் தான் மாறுதல் வேண்டி வம்சம் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டேன். அதனால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. சமரன் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறேன். அதில் த்ரிஷாவும் உள்ளார்.
மேலும் ராசு மதுரவனின் படத்திலும் நடிக்கிறேன். இந்த 2 படங்களிலுமே எனக்கு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் இல்லை என்பது சந்தோஷமான விஷயம். மாடர்ன் பெண்ணாக வருகிறேன். சமரன் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.
நான் நடித்துள்ள ‘திருத்தணி’, ‘கதிர்வேல்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன என்றார்.

11 நவம்பர் 2011

ஆடி அலுத்த மாளவிகா.

வெள்ளித்திரையில் குத்தாட்டம் போட்டாலும், சின்னத்திரைக்கு வரும்போது குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவது தமிழ் நடிகைகள் வழக்கம். அந்த லிஸ்டில் சேருகிறார் நடிகை மாளவிகா.
கவர்ச்சி ஆட்டம் போட்டு, களைத்துப்போய் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட மாளவிகாவுக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துவிட்டது.
ஆனால் பெரிய திரையில் நடிக்க உடம்பு இடம் கொடுக்கவில்லையாம். இரண்டு குழந்தைகளை வேறு கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை என்பதால், சின்னத்திரையில் ஏதாவது மெகா சீரியல் வாய்ப்பிருந்தா சொல்லுங்க என்று தனது பிஆர்ஓ மூலம் கேட்டு வந்தார்.
இப்போது அவருக்கு விளம்பரப் படம் ஒன்றிலும், ஒரு மெகா சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இவற்றில் நடிப்பதற்காக தனது ஒன்றரை வயது மகளுடன் சென்னையில் கேம்ப் போடப் போகிறாராம் மாளவிகா.

08 நவம்பர் 2011

சசிக்குமாருக்கு ஆதரவு வலுக்கிறது.

சூர்யாவின் 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வசனங்களை நீக்கிய இலங்கையைக் கண்டிக்கும் வகையில் இனி அங்கு தமிழ் திரைப்படங்களே திரையிடக்கூடாது என போராட்டம் வெடித்துள்ளது.
ஈழத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் நீக்கி விட்டு இலங்கையில் திரையிட்டுள்ளனர்.
இதற்கு தமிழ் பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனிமேல் இலங்கையில் எனது படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
7ஆம் அறிவு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுபோல் எல்லா தயாரிப்பாளர்களும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின், சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.
உலகம் முழுவதும் இலங்கை தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

05 நவம்பர் 2011

சகீலாவை காண தள்ளு முள்ளு!

ஆபாச பட வழக்கில் நடிகை ஷகிலா நெல்லை கோர்ட்டில் ஆஜாரானார். அவரைப் பார்க்க ஏராளமான 'ரசிகர்கள்' திரண்டுவிட்டனர்.
இவ்வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பாளையங்கோட்டையிலுள்ள ஒரு திரையரங்கில் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இரவு காட்சியில் ஆபாச படம் திரையிடப்பட்டது. இது தொடர்பாக திரையரங்கு குத்தகைதாரரான மதுரையை சேர்ந்த வசீகரன், மேலாளர் பாஸ்கரன், பேட்டையை சேர்ந்த ஆபரேட்டர் பரமசிவன் பட விநியோகஸ்தர்கள் சுப்பிரமணி, நெல்லை டவுன் சிவசுப்பிரமணி, ஊழியர்கள் பாளை முருகன், மாரிமுத்து, தாமஸ் படத்தில் ஆபாசமாக நடித்த ஷகிலா, நடிகர் தினேஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு நெல்லை முதலாவது கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. இதில் நடிகை ஷகிலா, பட வினியோகஸ்தர் சிவசுப்பிரமணியன், தியேட்டர் ஊழியர்கள் முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 5 பேர் நேற்று முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். விசாரணையை நீதிபதி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
விசாரணைக்கு நடிகை ஷகிலா நேரில் வந்ததால், அவரைக் காண ஏக கூட்டம் கூடிவிட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

04 நவம்பர் 2011

மழைக்கு ஒதுங்குகிறது ஒஸ்தி.

சிம்பு நடித்துள்ள ஒஸ்தி படம் தீபாவளிக்கு வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் வேலைகள் முடியாததாலும், பெரிய படங்களுடன் மோத வேண்டாமே என்பதாலும், நவம்பர் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போட்டிருந்தனர்.
ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், எங்கும் மழை கொட்டுகிறது.
தீபாவளிப் படங்கள் இப்போதே கூட்டமின்றி காற்று வாங்க ஆரம்பித்துவிட்டதாக விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்த நேரத்தில் ஒஸ்தியை வெளியிடுவது, ஒஸ்தியான யோசனை இல்லை என்று தயாரிப்பாளர்களும் இயக்குநரும் நினைத்ததால், படத்தை மேலும் சில தினங்களுக்கு தள்ளிப் போட்டுள்ளனர்.
வரும் நவம்பர் 25ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்!

02 நவம்பர் 2011

மனோரமாவின் உடல் நிலையில் முன்னேற்றம்.

தலையில் இருந்த ரத்தக் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகை மனோரமாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
குளியலறையில் வழுக்கி விழுந்த மனோரமாவுக்கு தலையில் அடிபட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடு்தது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தக் கசிவை அகற்றும் அறுவை சிகிச்சை நேற்று நடந்தது. வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனோரமாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. டியூப் மூலம் தான் உணவும் செல்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.