நடிகை அமலா பாலும், நானும் சில பொறுப்புகளை முடிக்க வேண்டி இருப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் அடுத்தமாதம் 7ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.இந்நிலையில், இயக்குனர் விஜய் காதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது;"ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையை தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன். அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது. மீடியாக்களிடமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.அமலா பால் சில பொறுப்புக்களை முடிக்க வேண்டும். நானும் எனது மனதுக்கு நெருக்கமான ‘சைவம்' படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன். அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.விஜயை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபால் வலியுறுத்தி வருவதால் திருமணம் தாமதமாகலாம் என்று செய்தி வெளியாகியிருந்தது.அதற்கேற்ப இந்த அறிக்கை வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக