பக்கங்கள்

13 ஜனவரி 2014

நடிகை அஞ்சலிதேவி காலமானார்!

பழம் பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை அஞ்சலிதேவி இன்று திங்கள் சென்னையில் காலமானார். அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு வயது 86. எம்.ஜி.ஆர்.,
சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம். நடன நாடகங்களில் புகழ் பெற்ற அஞ்சலிதேவி நாற்பதுகளில் முதலில் தெலுங்கிலும் பின்னர் தமிழ்த் திரைப் படங்களிலும் நடிக்கத் துவங்கினார். பி.யூ.சின்னப்பா, டி.ஆர்,மகாலிங்கம் போன்றவர்களுடன் தோன்றிய அஞ்சலிதேவிக்கு 1955-ல் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. சிவாஜி கணேசனுடன் ‘முதல் தேதி’, ‘நான் சொல்லும் ரகசியம்’ படங்களிலும், எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்‘, ‘மன்னாதி மன்னன்’ ஆகிய படங்களிலும் நடித்தார் அவர். ஆனால் தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார் அஞ்சலிதேவி. அவருடன் நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ குறிப்பிடத்தக்க ஒரு வெற்றிப்படமாகும். அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்திலும், நாகேஸ்வரராவுடன் ‘அனார்கலி‘யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அவரது கணவர் ஆதிநாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்து இன்னமும் இரசிகர்களை ஈர்க்கும் நகைச்சுவைப் படம் ‘அடுத்த வீட்டுப் பெண்’. தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது ‘லவகுசா’. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. அஞ்சலிதேவியின் மறைவுக்கு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக