காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள சேரனின் மகள் தாமினி தந்தையுடன் செல்ல விருப்பமிலை என்று கூறியதையடுத்து இரண்டு வாரங்களுக்கு பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சேரன் மகள் தாமினி, சினிமா டான்சர் சந்துருவை காதலித்தார். மகளின் காதலை மறுத்தார் சேரன். இதனால் சந்துருவின் வீட்டுக்கு தாமினி சென்றுவிட்டார்.
பின்னர் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால், தாமினியை அரசு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமினியை, நீதிபதிகள் மேடைக்கு அழைத்து பேசினர். சந்துருவுடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஆனால் சேரனும், அவரது மனைவி செல்வராணியும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். எனவே ஒருநாள் மட்டும் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் பாதுகாப்பில் தாமினியை அனுமதித்து நீதிபதிகள் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.
நேற்று பிற்பகல் நீதிபதி வி.தனபாலனின் அறையில் விசாரணை நடத்தப்பட்டது.
சேரன், செல்வராணி, உறவினர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக வந்திருந்தனர். சந்துருவின் தாயார் ஈஸ்வரி, சகோதரிகள் மற்றும் உறவினர்கள், வக்கீல் ஏ.ரமேசின் உதவியுடன் நீதிபதி அறைக்கு முன்பு வந்தனர்.
சந்துருவின் தாயார் மற்றும் சகோதரிகள் தாங்கள் கடுமையாக மிரட்டப்படுவதாகவும், கோர்ட்டுக்கு வரும் வரை தொடர்ந்து மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
முதலில் தாமினியை நீதிபதிகள் அழைத்து பேசினர். சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது. அதன் பின்னர் மனுதாரர் ஈஸ்வரி அம்மாள் அழைக்கப்பட்டார். அவர் தெலுங்கு பேசுபவர், தமிழ் சரிவர தெரியாது என்பதால், மகள் பத்மாகவுரியை உடன் அழைத்து சென்றார். அவர்களிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது.
பின்னர் சேரன் தனியாக அழைக்கப்பட்டார். ஒரு மணி நேரம் அவர், நீதிபதிகளுடன் பேசினார். பின்னர் அனைத்து தரப்பினரின் வக்கீல்களையும் நீதிபதிகள் அழைத்து பேசினர். அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இரண்டு தரப்பினரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டோம். இப்படிப்பட்ட சூழ்நிலை வந்ததை ஒவ்வொருவரும் விவரித்தனர். தாமினியின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை இரண்டு தரப்பினரும் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன சில விஷயங்கள், இந்த வழக்கின் பிற்பகுதியில் விசாரிக்கப்படும்.
சமுதாயத்தில் பிரபலமானவர்கள் என்பதால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேறு யாரும் புகுந்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கூடாது.
இரண்டு தரப்பினரும் கொடுத்துள்ள கருத்துகளை பரிசீலித்தோம். இரண்டு தரப்பினர் வீட்டிலும் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையின்படி, தாமினி நல்ல பாதுகாப்புடன் கூடிய வீட்டில் தங்குவதுதான் சிறந்தது என்று கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ ஷெரைன் வேளாங்கண்ணி மேல் நிலைப்பள்ளியின் (தாமினி படித்த பள்ளி) தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பி.கே.கே.பிள்ளையின் வீட்டில் இரண்டு வாரங்களுக்கு தங்குவதற்கு உத்தரவிடப்படுகிறது. இதற்கு தாமினியும், மற்ற தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். 21-ந் தேதி கோர்ட்டில் தாமினி ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தாமினியை பி.கே.கே.பிள்ளை அழைத்துச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக