நண்பன்.கொம் NHANPAN.COM
பண்மை தேடு,நல்ல அன்பைக் காண்பாய்! உண்மையை தேடு,நன்மையை காண்பாய்!
08 செப்டம்பர் 2023
நடிகர் மாரிமுத்து காலமானார்!
19 பிப்ரவரி 2023
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார்.
1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுமுதல் சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட, குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும்முன்பே அவரின் உயிரின் பிரிந்துவிட்டது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.
மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
08 அக்டோபர் 2021
பிரபல கவிஞர் பிறைசூடன் காலமானார்!
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.1985-ம் ஆண்டு எம்.எஸ். விஸ்வநாதன் மூலம் திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்ட இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகும்.சென்னையில் வசித்தாலும் சொந்த ஊரான நன்னிலம் மீது அதிகம் பாசம் வைத்திருந்தார் கவிஞர் பிறைசூடன்.இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர், காஞ்சி மஹா பெரியவரின் தீவிர பின்பற்றாளர். மஹா பெரியவா என்ற தலைப்பில் அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் கவிதை தொகுப்பு ஒன்றை இவர் வெளியிட்டிருக்கிறார்.திரைப்படங்களில் இன்றும் நமது செவிகளில் ரீங்காரமிடும், மீனம்மா மீனம்மா, நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான், ஆட்டமா தேரோட்டமா, சோலைப் பசுங்கிளியே, நடந்தால் இரண்டடி, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, இதயமே இதயமே என இன்னும் பல புகழ்பெற்ற பாடல் வரிகளுக்கு கவிஞர் பிறைசூடன் தான் சொந்தக்காரர். பாடலாசிரியர் மட்டுமல்லாமல் இவர் வசன கர்த்தாவும் கூட.ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்களை பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் தான் கவிஞர் பிறைசூடம் இடம்பெற்றிருந்தார். இதுமட்டுமல்லாமல் ஏராளமான பட்டிமன்றங்களுக்கும் இவர் தலைமை தாங்கி வந்தார். திரையுலகோடு தனது பணியை நிறுத்திக் கொள்ளாமல் ஆன்மிகப் பணியிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த இவர் திடீரென உயிரிழந்தது திரையுலகினரை சோகம் கொள்ளச் செய்துள்ளது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே மயக்கமுற்று சரிந்து உயிரிழந்திருக்கிறார்.மறைவின் போது கூட யாருக்கும் எந்த சிரமத்தையும் அளிக்காமல் சென்றுவிட்டார். சென்னை நெசப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கவிஞர் பிறைசூடன் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரையுலக இசை கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அண்மையில் தான் புகழ்பெற்ற கவிஞர் புலமைப்பித்தனை தமிழ் சினிமா இழந்தது. இப்போது அடுத்தபடியாக மீண்டும் ஒரு நல்ல கவிஞனை தமிழ் சினிமா இழந்திருக்கிறது.
14 மார்ச் 2021
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர்;ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் உருவான இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடிப்பில் ஈ படத்தை இயக்கினார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தை இயக்கினார். எஸ்பி ஜனநாதனின் படங்கள் அனைத்திலும் அரசியலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும்.தற்போது விவசாயிகள் பிரச்சனையை பேசும் வகையில் லாபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எடிட்டிங் பணியில் இருந்த அவர், அன்று பகல் வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் மீண்டும் ஸ்டுடியோவுக்கு திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.அப்போது சுயநினைவின்றியும், உடலில் எந்த அசைவும் இன்றியும் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான அவரது உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சற்று கவலைக்கிடமான நிலையில் இருந்த எஸ்பி ஜனநாதனுக்கு ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் எஸ்பி ஜனநாதன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். எஸ்பி ஜனநாதனின் மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் விருமாண்டி பதிவிட்டுள்ள டிவிட்டில் அண்ணா எப்போதும் அன்பை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தே மனித தெய்வமே தெய்வமாகிவிட்டாய் அண்ணா இயக்குநர்கள் சங்கத்தில் ஆரம்பித்த அண்ணன் ,தம்பி என்ற பாசம் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தது படத்தை பார்த்துவிட்டு ஆனந்தமாக பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
03 மார்ச் 2021
தயாரிப்பாளர் தவறாக நடக்க முற்பட்டார் என ரெஜினா புகார்!
நடிகை ரெஜினா சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும்போது தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக சொல்லியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் ஆரம்பகாலத்தில் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறியுள்ளார். அதில் ‘எனக்கு 20 வயது இருக்கும்போது ஒரு தயாரிப்பாளர் கதையை பற்றி சொல்லும்போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்கள் செய்யவேண்டி இருக்கும் என கூறினார். எனக்கு அது புரியவில்லை. அதனால் என் மேனேஜரிடம் கேட்டேன். அவர் விளக்கி சொன்னதும் எனக்கு புரிந்தது. பின்னர் அவரின் போனை எடுக்கவே இல்லை’ எனக் கூறியுள்ளார்.
25 செப்டம்பர் 2020
16 மொழிகள்.. 40 ஆயிரம் பாடல்கள்..பாடும் நிலா கடந்து வந்த பாட்டுப் பாதை!
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 74.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் இசை மேதையானது குறித்த ஓர் தொகுப்பு..எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு மயங்காத மனிதர்களே கிடையாது என சொல்லலாம்.. அந்தளவுக்கு அற்புதமான குரல் வளத்தை கொண்டவர். ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியமான இவர் சுருக்கமாக எஸ்பி பாலசுப்ரிமணியம் என்றும், எஸ்பிபி, என்றும் பாலு என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.சிறுவயதிலேயே இசை ஆர்வம் அதிகம் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம். காரணம் அவரின் தந்தை ஒரு ஹரிகதா கலைஞர் என்பதால் அப்போதே இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம்.மகனை எப்படியாவது பொறியாளர் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்த்பூர் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார் அவரது அப்பா. ஆனால் டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.இசையில் பேரார்வம் கொண்ட எஸ்பிபி பாடகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் அப்பாவுக்கோ மகனை இன்ஜினியராக பார்க்க வேண்டும் என்ற ஆசை. கல்லூரி நாட்களிலேயே பல பாட்டுப் போட்டிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார் எஸ்பிபி.ஆரம்பத்தில் மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்த எஸ்பிபி அப்போதே பல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். எஸ்பி பாலசுப்ரமணியம் முதல் பாடலாக தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா படத்தில் பாடினார். தமிழில் எம்எஸ்விதான் எஸ்பிபியை அறிமுகப்படுத்தினார்.சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமனார். அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளையும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியன். பல வெளிநாட்டு விருதுகளையும் குவித்துள்ளார் அதுமட்டுமின்றி நாட்டின் மிக உயரிய விருதுகளான மத்திய அரசின் பத்மஸ்ரீ, பம்பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.எஸ்பி பாலசுப்ரமணியம் சிறந்த பின்னணி பாடகராக மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞரும் ஆவார். அதோடு மட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.இந்நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தான் விரைவில் மீண்டு வருவேன் என வீடியோ வெளியிட்டார். ஆனால் சில நாட்களிலேயே வரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.ஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இன்று பகல் அவரது உயிர் பிரிந்தது.
30 ஆகஸ்ட் 2020
பேப்பரில் எழுதி லவ் யூ சொன்னார் எஸ்பிபி!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)