14 மார்ச் 2021
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர்;ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் உருவான இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடிப்பில் ஈ படத்தை இயக்கினார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தை இயக்கினார். எஸ்பி ஜனநாதனின் படங்கள் அனைத்திலும் அரசியலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும்.தற்போது விவசாயிகள் பிரச்சனையை பேசும் வகையில் லாபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எடிட்டிங் பணியில் இருந்த அவர், அன்று பகல் வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் மீண்டும் ஸ்டுடியோவுக்கு திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.அப்போது சுயநினைவின்றியும், உடலில் எந்த அசைவும் இன்றியும் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான அவரது உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சற்று கவலைக்கிடமான நிலையில் இருந்த எஸ்பி ஜனநாதனுக்கு ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் எஸ்பி ஜனநாதன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். எஸ்பி ஜனநாதனின் மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் விருமாண்டி பதிவிட்டுள்ள டிவிட்டில் அண்ணா எப்போதும் அன்பை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தே மனித தெய்வமே தெய்வமாகிவிட்டாய் அண்ணா இயக்குநர்கள் சங்கத்தில் ஆரம்பித்த அண்ணன் ,தம்பி என்ற பாசம் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தது படத்தை பார்த்துவிட்டு ஆனந்தமாக பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக