பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். காலம் கடந்தும் பெயர் சொல்லக்கூடிய பல்வேறு திரைப்படங்களை அவர் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கியவர்.மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் பசுமையாக நிழலாட கூடியவை. அந்த காலகட்டத்தில் இவை புதிய பரிணாமத்தை வழங்கிய திரைப்படங்களாக பார்க்கப்பட்டன. சமீப காலத்தில் நடிகராகவும் அவர் ஜொலிக்க ஆரம்பித்து இருந்தார். விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த தெறி திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட, உதயநிதி நடித்துள்ள நிமிர் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மகேந்திரன் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மகேந்திரனுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் திரையுலகத்திற்கும், ரசிகர்களுக்கும் மகேந்திரனின் இறப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக