பக்கங்கள்

25 மே 2013

டி.எம்.செளந்தரராஜன் காலமானார்!

Tms Hospitalised
டி.எம்.செளந்தரராஜன் 
இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார். வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன். பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார். 1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன். அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார். 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டி.எம்.சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

07 மே 2013

திரிஷாவிற்கு ஒன்று அம்மாவுக்கு ஒன்று!

திரிஷா 
நட்சத்திர ஓட்டலில் தன் அம்மாவுக்கு தனி ரூம் போடாததால் ஆத்திரமடைந்த நடிகை த்ரிஷா, படப்பிடிப்புக்கு வர மறுத்து ரகளை செய்தார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்புக்காக சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் த்ரிஷா. உடன் அவர் அம்மாவும் சென்றிருந்தார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் ஒதுக்கி இருந்தனர். சுவிட்சர்லாந்தில் ஒரு அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ 20 ஆயிரத்துக்கும் மேல். மேலும் வழக்கமாக த்ரிஷாவுடன் ஒரே அறையில்தான் உமாவும் தங்குவார். எனவே ஒரு ரூம் மட்டும் போட்டார்களாம். ஆனால் இதை அறிந்த த்ரிஷா ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார். அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு சண்டை போட்டுள்ளார். படக்குழுவினர் ஒரு ரூம்தான் ஒதுக்க முடியும் என பிடிவாதம் பிடித்ததால் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்துவிட்டாராம் த்ரிஷா. பின்னர் இயக்குநர் அகமது அங்கு விரைந்து த்ரிஷாவை சமாதானப்படுத்தியுள்ளார். த்ரிஷா விருப்பப்படி அம்மாவுக்கு தனி ரூம் ஒதுக்கிய பிறகே, த்ரிஷா படப்பிடிப்புக்கு வந்தாராம்.

03 மே 2013

மீண்டும் வருகிறார் சிம்ரன்!

சிம்ரன் 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூர்யா படத்தில் நடிக்க வருகிறார் சிம்ரன். கௌதம் மேனன் - சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக கைகோர்த்திருக்கும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. பட பூஜையை தொடர்ந்து சூர்யா சம்மந்தப்பட்ட ஒருசில காட்சிகளை கௌதம் படமாக்கினார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். சூர்யா அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடித்த சிம்ரன் , கௌதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில் சிம்ரன் மீண்டும் சூர்யா படத்தில் இணைகிறார். இதனிடையே படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிக்க வைக்க நன்கு தமிழ் பேசத் தெரிந்த ஒரு நாயகியை தேடி வருகிறார்களாம். கெளதமே இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.