பக்கங்கள்

08 செப்டம்பர் 2023

நடிகர் மாரிமுத்து காலமானார்!

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக ரசிகர்கள் இதயத்தில் ஆதிக்கம் செய்துவந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.எதிர்நீச்சல் தொடருக்காக இன்று காலை குரல்ப் பதிவு இடம்பெற்றபோது, மயங்கி விழுந்த மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ள மாரிமுத்து, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.நடிகர் மாரிமுத்து இயக்குநர், நடிகர்,தொலைக்காட்சி நடிகர் நடிகர் என பன்முகத் திறமைகளை வெளிக்காட்டி புகழடைந்தவர். தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து ஆரம்ப காலத்தில் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர். தொடர்ந்து,ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் சிறப்பான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்தவை.வாலி, உதயா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மாரிமுத்து, சமீபத்தில் வெளியாகிய ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தக் பாத்திரம் இரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஷங்கர் -கமல்ஹாசன் கூடடணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் மாரிமுத்து.ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர்தான் மாரிமுத்துவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த தொடரில் மாரிமுத்து நடித்துவந்த குணசேகரன் பாத்திரம் வில்லனாக இருந்தாலும், அவரது வசனம்,உடல் மொழி உள்ளிட்டவை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டத்தை கொடுத்திருந்தது. அடுத்தடுத்து தொடரில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களை கவர்வதற்கு முக்கியமான காரணமாக குணசேகரன் பாத்திரம் அமைந்தது. இந்த பாத்திரத்திற்காக, அதன் முன்னேற்றத்திற்காக மாரிமுத்து, தனியாக எதையும் செய்யவில்லை என்றபோதிலும் தன்னுடைய தந்தையின் பாத்திரம் தன்னுள் இறங்கி, குணசேகராக மிளிர்ந்ததாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இன்றைய இந்த தொடரின் குரல் பதிவை மேற்கொண்டபோதுதான் மாரிமுத்து மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார். மாரிமுத்துவிற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். 1994ம் ஆண்டில் பாக்கியலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் மாரிமுத்து. கடந்த 2ம் தேதி தன்னுடைய 27வது திருமண நாளை குடும்பத்தினரோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார் மாரிமுத்து. இந்நிலையில் சில தினங்களிலேயே தங்களை விட்டு மாரிமுத்து பிரிந்தது குறித்து குடும்பத்தினர் மிகவும் வேதனையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

19 பிப்ரவரி 2023

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுமுதல் சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட, குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும்முன்பே அவரின் உயிரின் பிரிந்துவிட்டது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.